மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தலைநகர் டெல்லியின் எல்லையில் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் ஆரம்பித்து இன்றோடு 76-வது நாள் எட்டியுள்ளது. இந்நிலையில் போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து மாற்றம் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்வதாக டெல்லி போக்குவரத்து பிரிவு காவல் துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதுமிலிருந்து திரண்டுள்ள விவசாயிகள் டெல்லியின் சிங்கு, காசிப்பூர், டிக்கிரி மாதிரியான பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக போக்குவரத்து மாற்றங்களை டெல்லி போக்குவரத்து பிரிவு காவல் துறை மேற்கொண்டுள்ளது. நொய்டாவிலிருந்து டெல்லி வரும் கேரேஜ் வே தற்காலிமாக போராட்டத்தின் காரணமாக முடங்கியுள்ளது. அதே நேரத்தில் டெல்லியிலிருந்து நொய்டா செல்லும் கேரேஜ் வே வழக்கம்போல செயல்பட்டு வருகிறது.
காசிப்பூர் எல்லை மூடப்பட்டுள்ளதால் டெல்லி-நொய்டா-டெல்லி ஃப்ளைவே, கர்காரி மோட் மற்றும் ஷாஹத்ரா வழியாக காஜியாபாத்தை அடைய மோட்டார் வாகன பயணிகளை போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லியிலிருந்து ஹரியானா வந்து செல்லும் சாலையும் மூடப்பட்டுள்ளது. முகர்பா மற்றும் ஜி.டி.கே சாலையில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவுட்டர் ரிங் ரோடு, ஜி.டி.கே சாலை மற்றும் என்.எச் -44 ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் போலீசார் பரிந்துரைத்துள்ளனர். டெல்லி-குர்கான் மற்றும் டெல்லி-ஃபரிதாபாத் வழித்தடங்களில் உள்ள எல்லைகளை போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.