ஆர்யன் கான் வழக்கமான போதைப்பொருள் நுகர்வோர் என்பதற்கு சான்று உள்ளது என்றும், ஆர்யன் கானிடம் எந்த போதைப்பொருட்களும் இல்லை என்று கூறுவது தவறானது என்றும் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மும்பை சொகுசுக்கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த விசாரணையில் பதிலளித்த தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், " ஆர்யன் கான் ஒரு முறை மட்டும் போதை மருந்து உட்கொள்ளவில்லை, கிடைத்த அறிக்கையின்படி அவர் கடந்த சில வருடங்களாக அதை உட்கொண்டதாக தெரிகிறது. அர்பாஸ் (ஆர்யன் கானின் நண்பர்) என்பவரிடம் இருந்து ஆறு கிராம் சரஸ் பறிமுதல் செய்யப்பட்டது, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டபோது ஆர்யன்கானும் அவருடன் இருந்தார்" என்று நீதிமன்றத்தில் கூறினார்.
ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிராக வாதிட்ட அனில் சிங், "இது மகாத்மா காந்தியின் பூமி, இதுபோன்ற போதைப்பொருள் பயன்பாடு சிறுவர்களை, இளைஞர்களை மிகவும் பாதிக்கிறது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது, எனவே இது ஜாமீன் வழங்குவதற்கான நிலை அல்ல" என்று கூறினார்.