டெல்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திடீர் ராஜினாமா.. யார் இந்த அர்விந்தர் சிங் லவ்லி..
டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த அரவிந்தர் சிங், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், காங்கிரஸ் மீது பொய்யான மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு, டெல்லி காங்கிரஸ் பிரிவு எதிராக இருந்தது. டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எடுத்த அனைத்து ஒருமித்த முடிவுகளும் கட்சியின் பொதுச் செயலாளரால் ஒருதலைபட்சமாக நிராகரிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய அரவிந்தர் சிங் லவ்லி, தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வதாகவும் கூறினார்.
டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்ட அரவிந்தர் சிங் லவ்லி, டெல்லி பல்கலைக்கழகத்தின் எஸ்ஜிடிபி கல்சா கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
இளம் வயதில் அரசியலுக்குள் நுழைந்த அவர் 1990-ல் டெல்லி இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக உயர்ந்தார். அதைத் தொடர்ந்து 1992 முதல் 1996 வரை இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். 1998-ல் காந்தி நகர் தொகுதியில் வெற்றிபெற்று அவர் சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். 2015-ஆம் ஆண்டு வரை தனது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய லவ்லி, ஷீலா தீட்சித் தலைமையிலான அரசில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வருவாய், கல்வி மற்றும் போக்குவரத்து உட்பட குறிப்பிடத்தக்க துறைகளின் அமைச்சர் பதவிகளை வகித்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அவர், பாஜக வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீரிடம் தோல்வியை தழுவினார். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக காங்கிரஸில் இருந்த லவ்லி, 2017-ல் கட்சியிலிருந்து பிரிந்து பாஜகவில் இணைந்தார். சில மாதங்களிலேயே அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொண்டார். இதனை தொடர்ந்து, 2023 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்ட அவர் தற்போது பதவி விலகியுள்ளார்.