இந்தியாவில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், தன் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசு அதிகாரிகளுடனான சந்திப்பை வாரத்துக்கு 5 ஆக அதிகரிக்க வேண்டும் எனக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்த வழக்கு இன்று (ஏப்ரல் 10) விசாரணைக்கு வந்தபோது, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில், ”புதுடெல்லி அரசில் இருக்கும் பணிப் பளுவுக்கு ஏற்ப, அரசு அதிகாரிகளுடனான சந்திப்பை அதிகரிக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது. ”சிறைக்குள் இருந்து அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அவருக்குச் சிறப்பு சலுகைகளை வழங்க முடியாது” என அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஏற்கெனவே, வாரத்தில் இரண்டு முறை அரசு அதிகாரிகளை சந்திக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. கைது நடவடிக்கையில் சட்டவிதிகள் எதுவும் மீறப்படவில்லை. உரிய காரணங்களின் அடிப்படையில்தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டது’ என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்ததுடன் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவையும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் இன்று, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று (ஏப்ரல் 10) டெல்லி சமூக நலத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், தவிர கட்சியில் இருந்தும் விலகியிருப்பது ஆம் ஆத்மியில் மட்டுமல்லாது நாடு முழுவதுமே அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.