முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை போல, தனி பாதுகாவலராலேயே தான் கொல்லப்படலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாபில் உள்ள செய்தி ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், பாஜகவினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும், ஒருநாள் அந்தக் கட்சி தன்னை கொன்றுவிடும் என்றும் கூறியுள்ளார். அண்மையில் டெல்லி மோதி நகரில் நடந்த பேரணியின் போது, கெஜ்ரிவால் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். பின்னர், காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் என்றும், கட்சி மேலிடத்தின் மீதான அதிருப்தி காரணமாகவே, கெஜ்ரிவாலை அறைந்ததாகவும் காவல்துறையினர் கூறியிருந்தனர்.
ஆனால், பாஜகவே இதற்கு காரணம் என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியிருந்தது. தற்போது அளித்தப் பேட்டியிலும், இந்தச் சம்பவத்தை குறிப்பிட்ட கெஜ்ரிவால், தான் படுகொலை செய்யப்பட்டாலும், கட்சித் தொண்டர் தான் அதற்கு காரணம் எனக் காவல்துறையினர் கூறிவிடுவர் எனக் குற்றஞ்சாட்டினார்.
கட்சி மேலிடத்தின் மீது கோபம் அடைந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர், பஞ்சாப் முதல்வரை அறைவாரா? என்று வினவினார். அத்துடன் பாஜக தொண்டரால் பிரதமர் மோடியை அறைய முடியுமா ? என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.