இந்தியாவின் ஜனநாயக தேர்தல் பெருவிழாவுக்கு மத்தியில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், தன் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதேநேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ’தனது சர்க்கரை அளவைத் தொடர்ந்து சோதிக்கவும், குடும்ப மருத்துவரிடம் காணொலியில் உரையாடவும் அனுமதிகோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”சர்க்கரை அதிகமாக இருப்பதால்தான் வீட்டுமுறை உணவு வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டதாாக மருத்துவக் காரணங்களை காட்டி ஜாமீன் பெற வசதியாக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகளை சாப்பிடுகிறார்” என வாதம் வைத்தார்.
இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்குறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ”வெற்று விளம்பரத்திற்காக அமலாக்கத் துறை இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது. தற்போது இந்த மனுவை திரும்பப் பெற்று, திருத்தம் செய்து தாக்கல் செய்கிறோம்” எனப் பதில் வாதம் வைத்தார்.
இதையடுத்து, டெல்லி முதல்வருக்கு திகார் சிறையில் அளிக்கப்படும் உணவு குறித்த விவரங்களை தாக்கல் செய்ய சிறை நிர்வாகத்துக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவ வசதிகளை செய்து தர மத்திய அரசு மறுப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.