கடந்த 21ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே அரசை நடத்தி வருகிறார். டெல்லி நீர்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு இரண்டு முக்கிய உத்தரவுகளையும் சிறையிலிருந்து அவர் பிறப்பித்திருக்கிறார்.
மற்றொரு பக்கம் முதலமைச்சர் இல்லாமலேயே டெல்லி சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் சிறையில் இருந்தபடி, அரசை நடத்துவது அரசியல் சாசனத்தை கேள்விக் குறியாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனாலும் அரவிந்த் கெஜ்ரிவாலே முதலமைச்சராக தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்து.
இந்நிலையில், கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லியை சேர்ந்த சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன், “சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க கூடாது என்பதற்கு இந்திய அரசியல் சாசன சட்டத்தில் தடை எதுவும் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் நீதிமன்றங்களின் தலையீடு சரியானதா என கேள்விகளை எழுப்பினார்.
இந்த விவகாரத்தை டெல்லி துணை நிலை ஆளுநர் கையாண்டு வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி, “முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் நீடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என கூறியுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக, டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா ஆலோசித்து வருவதாகவும் இது தொடர்பாக குடியரசு தலைவருக்கு அவர் பரிந்துரைகளை வழங்க இருப்பதாகவும் டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இத்தகைய பரிந்துரை வழங்குவது என்பது துணை நிலை ஆளுநரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால் அவரால் அதனை செய்ய முடியும் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே கெஜ்ரிவாலின் மனைவி முதல்வராக உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் போலவே அவரது மனைவி சுனிதாவும் இந்திய வருவாய் ஆட்சிப்பணி பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆரம்ப காலங்களில் போராட்டங்கள், கட்சிப்பணிகளில் சுனிதா ஈடுபட்டார். எனினும் தற்போது ஆம்ஆத்மி கட்சியில் எந்தப்பொறுப்பிலும் சுனிதா இல்லை.
பீகார் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் பதவி விலக நேரிட்டபோது அவரது மனைவி ராப்ரி தேவி அப்பதவியில் தொடர்ந்தார். இதே பாணியை அரவிந்த் கெஜ்ரிவாலும் பின்பற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான வாய்ப்பு நிறைய உள்ளதாக கூறப்படுகிறது.