கர்நாடகாவின் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா மீது சில மாதங்களுக்கு முன்பு, பெண் ஒருவர், மோசடி வழக்குத் தொடர்பாக உதவி கேட்க சந்தித்தபோது அவர் தனது 17 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் இந்தப் புகாரை எடியூரப்பா மறுத்திருந்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், புகாரளித்த பெண் சமீபத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் ஏற்கெனவே புகார் கொடுத்து இதுவரை எடியூரப்பா கைது செய்யப்படவில்லை என சிறுமியின் சகோதரர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி சிஐடி விசாரணைக்கு எடியூரப்பா ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் அவர் கடந்த 11-ஆம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் அவர் சிஐடி விசாரணைக்கு 17-ஆம் தேதி ஆஜரவுள்ளதாகவும் அதுவரை அவகாசம் வழங்கவேண்டும் எனவும் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த சூழலில் இன்று, பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமீன் பெறமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து எந்த நேரத்திலும் எடியூரப்பா கைது செய்யப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. ”தேவைப்பட்டால் போக்சோ சட்டப்படி எடியூரப்பாவை கைது செய்வோம்” என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.