மணிப்பூரில் பற்றி எரியும் வன்முறை நெருப்பு இன்னும் அணைந்தபாடில்லை. இந்தச் சூழலில், மணிப்பூர் மாநிலத்தில் விடுப்பில் சென்றிருந்த ராணுவ வீரர் ஒருவர், கடத்தி மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டம் தருங்கைச் சேர்ந்தவர் செர்டோ தாங்தாங் கோம். ராணுவ வீரரான இவர், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்துள்ளார். இதற்கிடையே, அவரின் உடல், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள குனிங்தேக் கிராமத்தில் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. மேலும், அது காங்போக்பி மாவட்டத்திலுள்ள லீமாகோங்கில் இந்திய ராணுவத்தின் DSC படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய் செர்டோ தாங்தாங் கோம் என அடையாளம் காணப்பட்டது. இதுதொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ”இந்தச் சம்பவம் நிகழ்ந்த நாளான கடந்த 16ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆயுதமேந்திய மூன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டார் என இந்தச் சம்பவத்தை நேரில்கண்ட ஒரே சாட்சியான அவரின் 10 வயது மகன் தெரிவித்தார். அதோடு அவர்கள், சிப்பாயை துப்பாக்கிமுனையில் ஒரு வெள்ளைநிற வாகனத்தில் கடத்திச் சென்றதாக அவரின் மகன் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, அன்று நாள் முழுவதும் ராணுவ வீரரை, போலீசார் தேடியுள்ளனர். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இதனால் அவரது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில்தான் நேற்று காலை 9:30 மணியளவில், இம்பாலுக்கு அருகில் குனிங்தேக் கிராமத்தில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், சிபாயின் தலையில் ஒரு தோட்டா காயம் இருந்ததாக அவரின் சகோதரர், மைத்துனர் தெரிவித்ததையடுத்து, போலீஸார் அவரின் உடலைக் கண்டறிந்தனர்.
ராணுவத்தின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி, ”ராணுவ வீரருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். மேலும், அவர் கொல்லப்பட்டதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கடினமான காலங்களில் அவரின் குடும்பத்துக்கு நாங்கள் ஆதரவாக நிற்கிறோம். அவர் குடும்பத்தின் விருப்பப்படி இறுதிச்சடங்குகள் நடத்தப்படும். அவரின் குடும்பத்துக்கு எல்லா வகையிலும் உதவ ராணுவம் ஒரு குழுவை அனுப்பியிருக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.