“அயோத்திக்கு ராணுவத்தைக் கொண்டு வாருங்கள்” - அகிலேஷ் வேண்டுகோள்

“அயோத்திக்கு ராணுவத்தைக் கொண்டு வாருங்கள்” - அகிலேஷ் வேண்டுகோள்
“அயோத்திக்கு ராணுவத்தைக் கொண்டு வாருங்கள்” - அகிலேஷ் வேண்டுகோள்
Published on

விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ள நிலையில், அயோத்தி நகரில் தேவைப்பட்டால் ராணுவத்தை அமர்த்த வேண்டுமென சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஸ்வ ஹிந்து பரிஷத் தர்ம சபா பேரணி நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பேரணியில் சுமார் 2 லட்சம் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும் முதல்முறையாகக் குடும்பத்துடன் அயோத்தி நகருக்கு இரண்டுநாள் பயணமாக இன்று வந்துள்ளார். ராமர் கோயில் தொடர்பாக மடாதிபதி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். 

இதற்காக, அயோத்தி நகருக்கு கூட்டம், கூட்டமாக விஹெச்பி, சிவசேனவைச் சேர்ந்தவர்கள் படையெடுக்கிறார்கள். இதனால் அயோத்தி முழுமையும், சிவசேனா, விஎச்பி தொண்டர்கள் நிறைந்துள்ளனர். இந்த நிகழ்வுகளை பொருட்டு அயோத்தி பரபரப்பாக காணப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தி நகரில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியின் தற்போதைய நிலவரம் குறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், “உத்தரபிரதேசத்தில் தற்போது உள்ள சூழலை கண்காணிக்க வேண்டும். இது மிகவும் நுட்பமாக கவனிக்க வேண்டிய விவகாரம். தேவைப்பட்டால் ராணுவத்தைக் கொண்டு வர வேண்டும். பாஜகவும் அவரது கூட்டணியினரும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள்” என்றார் அகிலேஷ்.

ஆனால், “யாரும் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. உத்தரப்பிரதேசத்தில் அமைதி நிலவி வருகிறது. அரசு பெரிய அளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாது. 1990களில் நிலை போன்று ஏற்படும் என அகிலேஷ் நினைத்தால் அது யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் நிகழாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அளித்துள்ளோம்” என உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா கூறியுள்ளார்.

இதனிடையே, அயோத்தி வந்துள்ள உத்தவ் தாக்கரே, “ராமர் கோயில் விவகாரத்தில் நான் அரசியல் செய்வதற்காக இங்கு வரவில்லை. இந்துத்துவா எங்கள் மூச்சுக்  காற்றில் உள்ளது. யாராலும் ராமரை மறக்க முடியாது. நம்முடைய வரலாற்றை கொண்டு வந்துள்ளேன். நான் உள்நோக்கத்துடன் தான் வந்துள்ளேன். ஆனால், யாருடனும் சண்டையிட வரவில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ராமர் கோயிலை விரும்புகிறார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரை மணி நேரம் கூட நீங்கள்(பாஜக) யோசிக்கவில்லை. ஆனால் ராமர் கோயில் கட்ட ஏன் யோசிக்கிறீர்கள்?. இந்த விவகாரத்தில் அரசு 4 ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருக்கிறது. நான் இங்கு வந்துள்ளது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் கும்பகர்ணன்களை (பாஜக) எழுப்பி விடதான். பெரும்பான்மை இருக்கும் பாஜக, ராமர் கோயில் கட்டும் தேதியை அறிவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே, வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணி நடத்தும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக மாணவர்கள் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பேரணியால் அயோத்தியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உத்தரப்பிரதேச முதல்வர், ஆளுநர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என அவர்கள் கூறியுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com