ராணுவத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டது தொடர்பாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி பேர் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராணுவ சிப்பாய் எழுத்தர் மற்றும் சிப்பாய் வர்த்தகர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நாடு முழுவதும் உள்ள 52 மையங்களில் நடந்தது. தேர்வின்போது, போலீசாரும், புலனாய்வு துறையினரும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இத்தேர்வுக்கான வினாத்தாள்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் முன்கூட்டியே கசிந்ததை தானே நகர போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்த்தின் பல்வேறு நகரங்களிலும், கோவாவிலும் அதிரடிச் சோதனைகளை நடத்தினர். அப்போது, வினாத்தாள் கசிவு தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர், துணை ராணுவப் படை வீரர் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனால் மகராஷ்ட்ரா, குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள 6 மையங்களில் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த வினாத்தாள்களை பயிற்சி நிலையங்களை நடத்தும் சிலரும், ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள் சிலரும் வெளியிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக 210 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு முன்கூட்டியே வெளியிட்ட வினாத்தாளின் நகலை வழங்கிய அதிகாரிகளுக்கு மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சத்தை அளித்ததாகவும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.