“எல்லைப் பகுதியில் தாக்குதல்கள் குறைந்துள்ளபோதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்” என ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தார். இதுகுறித்து அவர், வருடாந்திர ராணுவ தின செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
ராணுவ தின செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர், “வடக்கு எல்லையில் நிலைமை சீராக இருப்பதுடன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. நம்முடைய ராணுவம் தயார் நிலையில் இருப்பதால், எதையும் சமாளிக்கும் திறன் பெற்றுள்ளது. இரு நாட்டு (இந்தியா - சீனா) பேச்சுவார்த்தையில் உள்ள ஏழு பிரச்சினைகளில் தற்போது ஐந்து தீர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் போர்நிறுத்தம் சிறப்பாக உள்ளது. ஆனால் பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு அண்டை நாடுகளின் ஆதரவு இன்னும் தொடர்ந்து இருந்து வருகிறது. இப்போதைக்கு எல்லைப் பகுதியில் தாக்குதல்கள் குறைந்துள்ளன.
எனினும், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். வடகிழக்கில், பெரும்பாலான மாநிலங்களில் அமைதி திரும்பியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் எதிர்கால தேசிய பார்வையுடன் முழுமையாக இணைந்துள்ளன. இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படையில் பெண் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான ஒப்புதல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, இன்னும் எல்லைக் கட்டுப்பாடு அருகே வலுவான அமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அப்படி, வலுவான முறையில் கட்டமைக்கும்போது, எதிரியின் எல்லா முயற்சிகளையும் நம்மால் தடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி, அருணாச்சலப் பிரதேச எல்லையில், தவாங் செக்டார் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் நடைபெற்றது. அதில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.