இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், தீபங்களை ஏற்றியும் , இனிப்புகளைப் பரிமாறியும் தீபாவளிப் பண்டியைக் கொண்டாடினர்.
பஞ்சாப்பில் உள்ள அட்டாரி - வாகா பகுதி, இந்தியா - பாகிஸ்தானின் எல்லையாக அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில், தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட முடியாத இந்த வீரர்கள், தாங்கள் பணியாற்றும் முகாமில் சீருடையுடன் திரண்டனர். முகாம் வளாகத்தில், தீபங்களை ஏற்றி வைத்ததோடு, சக வீரர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டும், பட்டாசுகளை வெடித்தும் தீப ஒளித் திருநாளைக் கொண்டாடினர்.
தீபாவளிப் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட முடியவில்லை என்ற போதும், பணியிடத்தில் சக தோழர்களுடன் தீபாவளி கொண்டாடியது மகிழ்ச்சியளித்ததாக அவர்கள் கூறினர்.
இதேப்போல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினர்.
அஸ்ஸாம் மாநிலம் தெஸ்பூரில் உள்ள மேக்னா ஸ்டேடியத்துக்கு சென்ற அவர், ராணுவ வீரர்களை சந்தித்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ராணுவ வீரர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.