கேரளாவின் ஹீரோவான பொறியியல் மாணவன்... சாமர்த்திய ஐடியாவால் 4 மீனவர்களின் உயிர் காப்பு

கேரளாவின் ஹீரோவான பொறியியல் மாணவன்... சாமர்த்திய ஐடியாவால் 4 மீனவர்களின் உயிர் காப்பு
கேரளாவின் ஹீரோவான பொறியியல் மாணவன்... சாமர்த்திய ஐடியாவால் 4 மீனவர்களின் உயிர் காப்பு
Published on

திருச்சூர் மாவட்டத்தில் கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை மீட்ட பொறியியல் மாணவர் தற்போது கேரளாவின் ஹீரோவாக உருமாறியிருக்கிறார்.


கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், நாட்டிகா கடற்கரைக்கு கடந்த செவ்வாய்க் கிழமை 4 மீனவர்கள் படகு வழியாக மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும், அவர்கள் கரைத்திரும்பாமல் இருந்துள்ளனர். இதனைக் கேள்விப்பட்ட மீட்பு பணியாளர்கள், அவரது குடும்பத்தினர் பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவரான, தேவங் சுபில் அவர்களை சந்தித்து மீனவர்களை மீட்க தனது ட்ரோன் கேமரா உதவும் எனக் கூறியிருக்கிறார். ஆனால் அவர்களோ இது விளையாட்டு அல்ல எனக் கூறி, தேவங்கை புறக்கணித்துள்ளனர்.

இதனையடுத்து நாட்டிகா எம்.எல்.ஏ கீதா கோபியை தொடர்பு கொண்ட தேவங், விஷயத்தை கூறி விளக்கியுள்ளார். அவர் காவல்துறை மற்றும் மீட்பு பணியாளர்களுடன் தேவங்கும் ட்ரோன் கேமராவுடன் கடலுக்குள் செல்ல உதவியிருக்கிறார். அதன் பின்னர் கடலுக்குள் சென்ற அந்தக்குழு தற்போது நான்கு மீனவர்களை உயிருடன் மீட்டுள்ளது.

இது குறித்து தேவங் சிபில் கூறும்போது, “  இது நான் கடலுக்குள் மிக ஆழமான பகுதிக்குச் சென்ற முதல் பயணம். படகானது கடலுக்குள் 11 மைல்கள் சென்றபோது, நான் எனது ட்ரோனை பறக்க விட்டேன். காற்று காரணமாக ஆரம்பத்தில் இந்த முயற்சி மிக கடினமானதாகவே இருந்தது. ட்ரோன் கேமரா வழியாக கைப்பற்றப்பட்ட காட்சிகளை எனது ஸ்மார்ட்போன் மூலம் கண்காணித்து வந்தோம்.

சரியாக 20 நிமிடங்களில், தலைகீழாக கிடந்த ஒரு படகில் ஓரத்தில் தத்தளித்து வந்த முதல் மீனவரை கண்டுபிடித்தோம். உடனே கடற்கரை போலீசார் படகை அந்தப் பக்கம் செலுத்தி அவரை மீட்டனர். அந்தப்பகுதியிலிருந்து 300 மீட்டரில் அடுத்த இரண்டு மீனவர்களை மீட்டோம். ஆனால் நான்காவது மீனவரை மீட்க ஒரு மணி நேரமானது. நான்காவது நபர், கிட்டத்தட்ட சோர்வடைந்து நீரில் மூழ்கும் தருவாயில் இருந்தார். அவரை மீட்ட சில மணி நேரங்களில் அவர் அவரது சுய நினைவை இழந்தார்.” என்றார்.

இது குறித்து அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறும்போது, “ சரியான நேரத்தில் உதவ முன்வந்த இளைஞரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அவரது சம்யோஜித யோசனையால், மீனவர்களை காப்பாற்ற முடிந்தது. அரசாங்கத்திடம் இளைஞருக்கு சன்மானம் அளிக்க பரிந்துரை செய்துள்ளேன்.” என்றார்.

மீட்கப்பட்ட நான்கு மீனவர்களும் சிகிச்சைக்காக திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கடலுக்குள் செலவிட்ட மீனவர்களில் ஒருவர் கரையை நோக்கி சத்தமிட்டு காப்பாற்றுமாறு குரல் கொடுத்துள்ளார்.

ட்ரோன் தொழில்நுட்பம் மூலம், மீனவர்களை மீட்கும் இந்த யோசனையை நடைமுறைபடுத்துவதற்கான திட்ட அறிக்கை கேரள
கடற்படையிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com