தமிழகத்தில் ஒரு சில நபர்கள் மீது அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக எனக்கு புகார்கள் கிடைத்தது. அதனால் தான் நான் தமிழகம் வந்தேன் என லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.
வேற்று மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகின்றனர் என வதந்திகள் பரவிய நிலையில், தமிழகத்தில் உள்ள வேற்று மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வலியுறுத்த தமிழகம் வந்துள்ளார் பீகாரின் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான்.
புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறிய சிராக் பஸ்வான், தமிழகத்தில் வேற்று மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என வெளியான வீடியோ பொய்யானது என தமிழ்நாடு அரசு கூறுகிறது. இதனைப் பொருத்தவரை இரண்டு விஷயங்கள் மட்டுமே இருக்க முடியும்; ஒன்று தாக்குதல் நடைபெற்று இருந்தால் அது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். மற்றொன்று பொய்யான தகவல்கள் என்றால், இதுபோன்ற பொய்யான தகவல்களை பரபுவர்களை கைது செய்ய வேண்டும். ஆனால் வெளியான வீடியோகளில் ஒரு வீடியோ உண்மை என்றாலும் கூட, அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும், தாக்குதல் நடைபெறுகிறது என்றும் எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வருகிறது. அதனால் மட்டுமே அவர்களை சந்திக்க தமிழகம் வந்துள்ளேன். இதனை அரசியலாக்க நான் விரும்பவில்லை. அரசு இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்; தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் எதுவுமே நடைபெறவில்லை என கூறிவிட்டு பின் உண்மை வெளியே தெரியவேண்டாம் என நினைக்காமல், நேர்மையான முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தை நான் அரசியல் ஆக்க விரும்பவில்லை எனவும் கூறினார்.