வித்தியாசமான முயற்சியில் ஆட்டோவில் மாற்றங்களைச் செய்து வீடாக வடிவமைத்த தமிழக கண்டுபிடிப்பாளர் அருண்பிரபுவை, மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா வியந்து பாராட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த அருண்பிரபு என்ற இளைஞர், ஆட்டோவை வீடு போலவே வடிவமைத்தார். சமையலறை, குளியலறை, படுக்கையறை போன்றவற்றோடு, சூரியமின் உற்பத்தி சாதனமும் அந்த ஆட்டோ வீட்டில் இடம்பெற்றிருந்தது. அந்த 'ஆட்டோ வீடு' குறித்து, முதல்முறையாக 2019 ஆம் ஆண்டு புதிய தலைமுறையில் செய்தி ஒளிபரப்பானது.
இந்நிலையில், மகேந்திரா டிராக்டர் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, அருண் பிரபுவின் 'ஆட்டோ வீட்டை' தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பாராட்டியுள்ளார். அருண்பிரபுவின் கற்பனை திறனை பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று வியந்துள்ள அவர், தங்களது நிறுவனத்தின் பொலீரோ பிக்கப் வாகனத்தை இவ்வாறு மாற்றி வடிவமைக்க அருண்பிரபு முன்வருவாரா என்று கேட்டுள்ளார். அவரை தொடர்பு கொள்ள யாரேனும் உதவ முடியுமா என்றும் ஆனந்த் மகேந்திரா ட்வீட் செய்துள்ளார்.