நிறைவேறிய தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா.. தொடரும் சர்ச்சைகள்!

“ராஜ்யசபாவில் விவாதத்திற்கு வரும்பொழுதாவது திமுக MPக்கள் அதை வலுவாக எதிர்த்து பேச வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்”- அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்
data protection bill 2023
data protection bill 2023pt web
Published on

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இதில் தினந்தோறும் அவை கூடும்போது, மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விவாதங்களை எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

மக்களவை ஒத்திவைப்பு
மக்களவை ஒத்திவைப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷா இவ்விவகாரத்தில் பதில் அளிப்பார் என ஆளும் தரப்பு கூறிய நிலையிலும் 'பிரதமர்தான் இவ்விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டும்' என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து அத்தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி (இன்று) முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் முழக்கங்களில் ஈடுபட்டு வந்தது. அதற்கு இடையேவும் நாடாளுமன்றத்தில் 20 மசோதாக்கள் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவையில் 15 மசோதாக்களும் மாநிலங்களைவையில் 12 மசோதாக்களும் இரு அவைகளிலும் 9 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் பெரும்பான்மையானவை எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அதிகார மசோதாவிற்கு எதிர்கட்சிகளின் தொடர் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் கூட, குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அதிகார மசோதா கிட்டத்தட்ட எட்டு மணிநேர பரிசீலனைக்குப் பிறகு மக்களவையில் நிறைவேறியது. இரவு 10 மணி கடந்தும் மாநிலங்களவை அலுவல்கள் இடைவெளியின்றி நடைபெற்றன.

இதேபோல டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2023-ம் நாடாளுமன்றத்தில் (மக்களவையில்) நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாக கருதப்படுபவை:

- பயனாளிகளின் தரவுகள் மூன்றாம் தரப்பு நிறுவனங்களில் சேமிக்கப்பட்டு இருந்தாலும் பயனாளிகளின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

- தரவு மீறல்கள் ஏதேனும் நிகழ்ந்தால் உடனடியாக தரவு பாதுகாப்பு வாரியம் (Data Protection Board) மற்றும் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். போலவே குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் தரவுச் செயலாக்கம் என்பது அவர்களின் பாதுகாவலர்களாக உள்ளவர்களுடைய ஒப்புதலுடனே செய்யப்பட வேண்டும்.

- நிறுவனங்கள் தரவுகளை பாதுகாக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அதிகாரியை தொடர்பு கொள்வதற்கான விவரங்களை பயனாளிகளுக்கும் பகிர வேண்டும்.

- இந்தியாவிற்கு அப்பால் உள்ள வெளிநாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் தனிப்பட்ட தரவு பரிமாற்றத்தை ஒழுங்குப்படுத்த மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

- தரவு பாதுகாப்பு வாரியத்திற்கு எதிராக செய்யப்படும் மேல்முறையீடுகள் தொலைத்தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தால் தீர்ப்பளிக்கப்படும்.

- தரவு பாதுகாப்பு வாரியத்தின் உறுதிமொழிகளின் கீழ் தனிநபர்களை வரவழைத்து பரிசோதிக்கவும், தனிநபர்களின் தரவுகளை கையாளும் நிறுவனங்களின் ஆவணங்களை ஆய்வு செய்யவும், மசோதாவை மீறுபவர்களைத் தடுக்க பரிந்துரைக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

- தரவுகள் மீறப்படுதல் மற்றும் அதன் தீவிரத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு அதற்கான அபராதத்தை தரவு பாதுகாப்பு வாரியம் மதிப்பிடும். தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க தவறியமை மற்றும் அதுகுறித்த தகவல்களை பயனர்களுக்கு தெரிவிக்கத் தவறினால் ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

அறப்போர் இயக்கம் கண்டனம்...

இந்நிலையில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய தினம், “டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம் என தமிழக திமுக எம்பிக்கள் உறுதியளித்தனர். ஆனால் இன்று அவர்களின் எதிர்ப்பு ஏதுமின்றி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது” என விமர்சித்திருந்தார்.

முன்னதாக அறப்போர் இயக்கம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக கடிதம் எழுதியிருந்தது. அதில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையில் கொண்டு வரப்படும் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை எதிர்க்க வேண்டும். தற்போதுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பொதுவாழ்வில் ஈடுபடாத தனிநபர்களின் அதாவது பொது வேலைக்கும் பொது நலனுக்கும் சம்பந்தம் இல்லாத தனிநபர்களின் தகவல்களை தரத் தேவையில்லை. ஆனால், பொது நலனில் ஈடுபட்டுள்ள தகவல்களை தரவேண்டும்.

ஆனால் கொண்டு வரப்படும் சட்டதிருத்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஒழிக்கும் நோக்கில் உள்ளது. அனைத்து தனிப்பட்ட நபர்களுக்கும் விலக்களிப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்துவிடும்.

நாடாளுமன்றத்தில் மற்றும் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் தகவல்கள் சாதாரண மனிதனுக்கும் தெரிய வேண்டுமென்பதே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம். ஆனால் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா இதை வலுவிழக்கச் செய்யும்.

இவையாவும், மக்கள் கையில் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பறிக்கும் செயலாகும்” என கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து இச்சட்டம் இன்று விவாதத்துக்கு வர உள்ளது. அதுகுறித்தும் ஜெயராம் வெங்கடேசன் பேசியுள்ளார்.

அதில் அவர், “Dpdp bill (தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா) / தகவல் அறியும் உரிமை சட்டதிருத்தம், ராஜ்யசபாவில் (மாநிலங்களவையில்) விவாதத்திற்கு வரும்பொழுதாவது திமுக MPக்கள் அதை வலுவாக எதிர்த்து பேச வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்” என்றுள்ளார்.

தொடரும் சர்ச்சை...

இதற்கிடையே, “திமுக உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்துமே இம்மசோதவை எதிர்த்தன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., இதை எதிர்த்தது. மேலும் மசோதவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். ஆனால் மத்திய அரசு எதையும் பொருட்படுத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றி விட்டார்கள்” என அறப்போர் இயக்கத்துக்கு எதிர்ப்புகளும் வலுத்துள்ளன.

இந்த எதிர்ப்பு பதிவுசெய்யப்பட்ட போது, திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் அதனொரு அங்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு இவர்களின் வாதங்களை ஏற்காததால், அனைவரும் வெளிநடப்பு செய்திருந்தனர். அதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில், மத்திய அரசு இம்மசோதாவை ‘Finance Bill’ என்ற பெயரில் தாக்கல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com