மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பைத்தியம் என்று காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் தற்போதைய சூழலில், இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 2-ஆக குறைந்துவிட்டன.
இதனிடையே, இந்த தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று கருத்து தெரிவித்திருந்தார். அதில், "வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது அவசியம். இனி காங்கிரஸை நம்பி எந்தப் பலனும் இல்லை. காங்கிரஸ் அதன் செல்வாக்கையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது" எனக் கூறினார்.
இந்நிலையில், மம்தா பான்ர்ஜியின் இந்தக் கருத்து குறித்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "மம்தா பானர்ஜி பைத்தியக்காரத்தனமாக பேசி வருகிறார். பைத்தியத்துக்கு எல்லாம் நாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. அடிப்படை புரிதல் இல்லாமல் அவர் பேசி வருகிறார். காங்கிரஸுக்கு நாடு முழுவதும் 700 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதத்தை விட அதிகமாக, அதாவது 20 சதவீதத்துக்கும் மேலான வாக்கு வங்கி காங்கிரஸுக்கு உள்ளது.
திரிணமூல் காங்கிரஸுக்கு மேற்கு வங்கத்தை தாண்டி எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்? உண்மையில் சொல்லப்போனால், பாஜகவின் ஏஜென்ட்டாகவே மம்தா செயல்படுகிறார். உத்தராகண்டிலும், கோவாவிலும் காங்கிரஸின் வாக்குகளை பிரிப்பதற்காகவே அவர் போட்டியிடுகிறார்" என அதிர் ரஞ்சன் செளத்ரி கூறினார்.