கடந்த 5 ஆண்டுகளில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் - 79% பேர் உயர் வகுப்பினரே!

கடந்த 5 ஆண்டுகளில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் - 79% பேர் உயர் வகுப்பினரே!
கடந்த 5 ஆண்டுகளில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் - 79% பேர் உயர் வகுப்பினரே!
Published on

”நீதிபதிகளை நியமிப்பதற்கான முதன்மைப் பொறுப்பை கொலீஜியம் அமைப்பு ஏற்று 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நீதிபதிகள் நியமனத்தில் அனைத்துச் சமூகங்களையும் சோ்ந்தவா்களுக்கு இன்னும் சமவாய்ப்பு கிடைக்கவில்லை” என நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் நீதித் துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் நியமனம் தொடா்பாக நீதித் துறை சாா்பில் சட்டம்-நீதி சாா்ந்த நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் அளிக்கப்பட்ட விரிவான விளக்கத்தில், ’கடந்த 2018 முதல் 2022 வரை நாட்டில் உள்ள உயா்நீதிமன்றங்களுக்கு 537 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனா். அவா்களில் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் 1.3 சதவிகித்தினராகவும், சிறுபான்மையினத்தைச் சோ்ந்த நீதிபதிகள் 2.6 சதவிகித்தினராகவும், பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் 2.8 சதவிகித்தினராகவும் உள்ளனர். 11 சதவிகித நீதிபதிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்களாக உள்ளனர்.

எண்ணிக்கையில்..

எஸ்.டி - 7 பேர் (1.3%)

எஸ்.சி - 15 (2.8%)

சிறுபான்மையினர் - 14 (2.6%)

ஓபிசி - 57 (11%)

மற்றவர்கள் - 20 

பொதுப்பிரிவு(உயர் சாதியினர்) - 424 பேர் (79%)

30 ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட, நீதித்துறையானது நீதிபதிகள் நியமனம்தான் மிக முக்கியமானது என்று கருதினாலும்கூட, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக, சமூகரீதியான அமைப்பாக மாறவில்லை’ என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அதில், ’நீதிபதிகளை நியமிப்பதற்கான முதன்மைப் பொறுப்பை கொலீஜியம் அமைப்பு ஏற்று 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், நீதிபதிகள் நியமனத்தில் அனைத்துச் சமூகங்களையும் சோ்ந்தவா்களுக்கு இன்னும் சமவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்றங்களில் சமூகப் பன்முகத்தன்மை நிலவுவது தொடா்ந்து தாமதமடைந்து வருகிறது.

நீதிபதிகள் நியமனத்தில் பல்வேறு சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பொறுப்பு கொலீஜியத்துக்கே உள்ளது. அந்த அமைப்பு அளிக்கும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டுமே மத்திய அரசின் பணி. அதைக் கருத்தில்கொண்டு, நீதிபதிகளை நியமிக்கும்போது பழங்குடியினா், பட்டியலினத்தோா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பெண்கள், சிறுபான்மையினா் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கொலீஜியம் அமைப்பை மத்திய அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் எஸ்சி., எஸ்டி., ஓபிசி, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பரிந்துரையை மேற்கொள்ள வேண்டும்’ என்று நீதித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தகவல் உறுதுணை: டைம்ஸ் ஆஃப் இந்தியா

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com