“கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு ஆப்பிள் நன்கொடை அளிக்கும்!” - உறுதி கொடுத்த தலைமை செயல் அதிகாரி டிம் குக்
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் பேர் வரை புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு ஆப்பிள் நன்கொடை அளிக்கும் என தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்.
இதனை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் கோரவனா தொற்று பரவலின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் ஆப்பிள் குடும்பத்தின் ஒட்டுமொத்த கவனமும் இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவில் உள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் தொடரை எதிர்த்து போராடி வரும் மக்கள் மீதும் தான் உள்ளது. அதன் காரணமாக ஆப்பிள் தனது ஆதரவை இந்தியாவிற்கு தெரிவித்து கொள்வதோடு மீட்பு நடவடிக்கைக்காக நன்கொடையும் அளிக்கும்” என அவர் உறுதி கொடுத்துள்ளார்.
இருப்பினும் ஆப்பிள் எவ்வளவு நன்கொடை அளிக்கிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. கூகுளின் சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லாவும் இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதி அளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.