பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 16 மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து மதிப்புகளை தாக்கல் செய்துள்ளனர்.
பிரதமராக மோடி பதவியேற்றதும், அரசின் வெளிப்படை தன்மை மற்றும் ஊழலுக்கு எதிரான அரசின் போராட்டம் ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 31க்குள் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், தன்னுடைய அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.2 கோடி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடி ரூபாயாக இருந்த மோடியின் சொத்து மதிப்பு தற்போது 2 கோடியாக அதிகரித்துள்ளது. மோடி சொத்து மதிப்பை இணையதளம் வாயிலாக அனைவரும் அறிந்து கொள்ள முடியும். இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள சொத்தில், அசையும் சொத்துக்கள் ஒரு கோடியே 13 ஆயிரத்து 403 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மோடியின் மனைவிக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து தகவல் இல்லை.
மொத்த அமைச்சர்களில் 15 பேர் மட்டுமே காலக்கெடுவான ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்துள்ளனர்.
பியுஷ் கோயல், ஸ்மிரிதி இரானி, மேனகா காந்தி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் இன்னும் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்யவில்லை. இதனால், அமைச்சர்களின் சொத்து மதிப்புகளை உடனடியாக தாக்கல் செய்யுமாறு சம்மந்தப்பட்ட துறைக்கு உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.