விமான விபத்து: சகோதரி குழந்தையை பார்க்கச் சென்ற குண்டூர் டாக்டர் பலியான சோகம்!

விமான விபத்து: சகோதரி குழந்தையை பார்க்கச் சென்ற குண்டூர் டாக்டர் பலியான சோகம்!
விமான விபத்து: சகோதரி குழந்தையை பார்க்கச் சென்ற குண்டூர் டாக்டர் பலியான சோகம்!
Published on

எத்தியோப்பிய விமான விபத்தில், அக்காவின் குழந்தைகளைப் பார்க்கச் சென்ற குண்டூரை டாக்டர் உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டது. புறப்பட்ட பத்து நிமிடங்களிலேயே பிஷோப்டு பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியானார்கள்.

இதில் கென்யாவைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர், கனடாவைச் சேர்ந்த 18 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவைச் சேர்ந்த தலா 8 பேர், பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர், இந்தியா, ஸ்லோவோகியா நாடுகளைச் சேர்ந்த தலா 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் அடையாளம் தெரிந்தது. அவர்கள், வைத்யா பனகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அனகேஷ், நுகவரப்பு மனிஷா மற்றும் ஷிகா கார்க். இதில் ஷிகா கார்க், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆலோசகர். நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தார்.

நுகவராப்பு மனிஷா, ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த மனிஷா, எம்.எஸ். படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். 2014 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில்தான் இருக்கிறார். அங்கு கிழக்கு டென்னஸியில் உள்ள குயில்லென் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றினார்.

(பெற்றோருடன் மனிஷா)

மனிஷாவின் மூத்த சகோதரி லாவண்யா நைரோபியில் வசிக்கிறார். அவருக்கு சமீபத்தில் ஒரே பிரவசத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. அதைப் பார்ப்பதற்காக மனிஷாவின் அப்பா வெங்கடேஷ்வர ராவ், அம்மா பாரதி உள்ளிட்ட உறவினர்கள் நைரோபி சென்றுள்ளனர். அவர்களைப் பார்க்க மனிஷாவும் சென்றுள்ளார். அமெரிக்காவில் இருந்து எத்தியோப்பியா வந்து அங்கிருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நைரோபி சென்றார். அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதுபற்றி மனிஷாவின் உறவினர் அவினாஷ் கூறும்போது, ‘’இதைக் கேள்விபட்டதும் அதிர்ச்சி அடைந்தோம். மனிஷாவின் பெற்றோர், அவர் உடலை குண்டூர் கொண்டு வருவதற்கான முயற்சியில் உள்ளனர். ஆனால் உடலை அடையாளம் கண்டு அனுப்புவது கடினம் என்று எத்தியோப்பியா தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்திருக்கிறோம்’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com