ஏமாறுபவர்கள் இருப்பவர்கள் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மகாத்மா காந்திக்குப் பதிலாக பாலிவுட் நடிகர் அனுபம் கெர் முகத்தைக் கொண்ட படமும், 'ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா' என்பதற்குப் பதிலாக 'ரிசோல் பேங்க் ஆஃப் இந்தியா' என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி, நவரங்புரா காவல் நிலையத்தில், தங்க வியாபாரியான மெகுல் தக்கர் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், ”1.6 கோடி மதிப்புள்ள 2,100 கிராம் தங்கம் தொடர்பான பேரம் ஒன்றிற்காக, தனது பணியாளரான பாரத் ஜோஷியை சந்தேக நபர்கள் இருவர் அணுகினர். தனக்கு நம்பகமான உறவைக் கொண்டிருந்த நகைக்கடை மேலாளர் பிரசாந்த் படேலின் அழைப்பைப் பெற்ற பிறகுதான், இதற்கு ஒப்புக்கொண்டேன். அப்போது, RTGS வழியாக முழுத் தொகையையும் உடனடியாக மாற்ற முடியாது என்று படேல் தம்மிடம் தெரிவித்தார். இதனால் ரூ.1.3 கோடியை ரொக்கமாக முதலில் வழங்குவதாகக் கூறினார்.
அதன்படி, சந்தேக நபர்கள் இருவரும், எனது பணியாளரிடம் அந்தத் தொகையை வழங்கியுள்ளனர். அத்துடன், 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 26 கட்டுகளை அந்த நபர்கள் ஜோஷியிடம் கொடுத்துவிட்டு இயந்திரத்தைப் பயன்படுத்தி பணத்தை எண்ணும்படி அறிவுறுத்தியுள்ளனர். மீதமுள்ள ரூ.30 லட்சத்தை எடுக்கச் செல்வதாகக் கூறிவிட்டு, அந்த தங்க நகையை வாங்கிச் சென்றுள்ளனர். அதை ஆய்வு செய்தபோது, ஜோஷி கள்ள நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவத்திற்குப் பதிலாக அனுபம் கெரின் உருவம் இருந்ததைக் கண்டுபிடித்து தனக்குத் தெரிவித்தார்” என அதில் தெரிவித்துள்ளார். அதன்பேரிலேயே தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீஸார் உடனடியாக விசாரணையைத் தொடங்கி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பான இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கும் நடிகர் அனுபம் கெர், “நாட்டின் 500 ரூபாய் நோட்டில் எனது படமா? நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.