`தி காஷ்மீரி ஃபைல்ஸ்: நடாவ் லாபிட்டின் கருத்து வெட்கக்கேடானது' - நடிகர் அனுபம் கெர்

`தி காஷ்மீரி ஃபைல்ஸ்: நடாவ் லாபிட்டின் கருத்து வெட்கக்கேடானது' - நடிகர் அனுபம் கெர்
`தி காஷ்மீரி ஃபைல்ஸ்: நடாவ் லாபிட்டின் கருத்து வெட்கக்கேடானது' - நடிகர் அனுபம் கெர்
Published on

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' வெறுப்புணர்வை தூண்டும் மோசமான படம் என்று கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தெரிவித்த கருத்துக்கு, அப்படத்தின் நடிகர் அனுபம் கெர் பதிலடி கொடுத்துள்ளார்.

கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் (நவ.28) நிறைவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழுவை சேர்ந்தவர் மற்றும் விழா தலைவர் நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டதென்பது கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்றார்.

நடாவ் லாபிட்டின் கருத்து சினிமாத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில் அவருக்கு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் அனுபம் கெர் கூறுகையில், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'  தொடர்பான நாடவ் லேபிட்டின் விமர்சனம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. அவர் இப்படி சொல்லி இருப்பது வெட்கக்கேடானது. சித்தி விநாயகர், அவருக்கு அறிவை கொடுக்கட்டும். பொய்யின் உயரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் சரி, உண்மையுடன் ஒப்பிடுகையில் அது எப்போதும் சிறியதே'' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், “இனப்படுகொலை சரியானது என்றால், காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றமும் சரிதான். நாடவ் இப்படி ஒரு அறிக்கை வெளியிடுவது வெட்கக்கேடானது. யூதர்கள் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர் அந்த சமூகத்திலிருந்து வந்தவர். அவர் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த சோகத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் வேதனைப்படுத்தியுள்ளார். இனியொருமுறை ஆயிரக்கணக்கானோரின் துன்பங்களைப் பயன்படுத்தி மேடையில் அவர் தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லாமல் இருக்க கடவுள் அவருக்கு ஞானத்தைத் தரட்டும்”

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கடந்த மார்ச் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் படத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் காணப்பட்டது. 1990ம் ஆண்டு வாக்கில் காஷ்மீரில் பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறிய சம்பவங்கள் காட்சிகளாக திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. இதனால் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியது.

இந்து - இஸ்லாமியர்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக இருப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. இந்தப் படத்தை பார்த்த பிரதமர் மோடி, திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களை நேரில் அழைத்து பாராட்டினார். பாஜக ஆளும் மாநிலங்களில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு வரி விலக்கு வழங்கப்பட்டது.

இந்த சூழலில்தான் கோவா திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இது தொடர்பாகத் நடாவ் லாபிட் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com