அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரை கவனிக்க மருத்துவர்கள் வராததால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் சிவ்பூர் பகுதியை சேர்ந்தவர் பாலசந்திர லோடி(50). இவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று காலை சிவ்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பாலசந்திர லோடி அங்கு அனுமதிக்கப்பட்ட 5 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அந்த வார்ட்டில் இருந்த பிற நோயாளிகள் தகவல் அளித்துள்ளனர்.
எனினும் மருத்துவர்கள் யாரும் பாலசந்திர லோடியை பார்க்க வரவில்லை. இதனால் அவரின் கண்களில் எறும்புகள் மொய்க்க ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து லோடியின் மனைவி அவரது கண்களில் மொய்த்து கொண்டிருந்த எறும்புகளை அகற்றி உள்ளார். இந்தச் சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,“ சிவ்பூர் மாவட்டத்தில் இறந்த நபரின் கண்களில் எறும்புகள் மொய்த்தது மிகவும் வருத்தம் மிக்க நிகழ்வு. இதுபோன்ற நிகழ்வுகள் கண்டிப்பாக நடக்க கூடாது. இது மனிதநேயத்திற்கு ஏற்பட்டுள்ள கலங்கம். நான் இதனை எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இந்த விவகாரம் தொடர்பாக நான் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தச் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.