அக்னிபாத் எதிர்ப்பு போராட்டங்கள் - தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ!

அக்னிபாத் எதிர்ப்பு போராட்டங்கள் - தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ!
அக்னிபாத் எதிர்ப்பு போராட்டங்கள் - தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ!
Published on

மத்திய அரசு அறிமுகப்படுத்திய “அக்னிபாத் திட்டம்” நாடு முழுவதும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான டாப் 10 தகவல்கள் இதோ!

1. ராணுவத்தில் வழங்கப்படும் கடுமையான பயிற்சிகளை தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறும் இளைஞர்களும், முழுமையாக பணியை முடித்து வெளியேறி வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களும் ஆயுதப் பயிற்சிகளை பெற்றவர்கள் என்பதால் வேலை இல்லாததால், அவர்கள் எளிதில் தீவிரவாத இயக்கங்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.

2. ராணுவ ரகசியங்களை தெரிந்துகொள்ள தீவிரவாத இயக்கங்களும் தங்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை 4 ஆண்டுகால ராணுவப் பணிக்கு அனுப்பக் கூடும் எனவும் முன்னாள் ராணுவ வீரர்கள் எச்சரிக்கின்றனர். 1970-களில் ராணுவத்தில் சுமார் 6, 7 ஆண்டுக்கால பயிற்சி பெற்று திரும்பியவர்களே, காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தில் அதிகம் சேர்ந்தார்கள் என்ற வரலாறை மறுக்க இயலாது.

3. 4 ஆண்டுகள் மட்டும்தானே அக்னிபாத் திட்டத்தில் இருக்கப் போகிறோம் என்ற மனநிலையில் பணியில் இளைஞர்கள் பணியாற்றினால் உயரதிகாரிகளால் என்ன செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

4. ராணுவத்தில் முழுப் புரிதலையும் பெற 2,3 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், அக்னிபாத் வீரர்களை வைத்து போர், கலவரம் போன்ற நெருக்கடியான சூழலை கையாளும்போது அவர்களது உயிருக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் ஆபத்தாக அமைத்து விடும் என எச்சரிக்கை விடுக்கின்றனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.

5. அரசு வேலை என்றால் நிரந்தரப் பணி என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்த நிலையில், 4 ஆண்டுகளில் 75% பேர் வெளியேற்றப்படுவர் என்ற எச்சரிக்கை வசனம் அக்னிபாத் “அக்னி”யாய் தகிக்க மிக முக்கிய காரணம் ஆகும்.

6. 25% பேர் மட்டுமே பணி நிரந்தரம் பெற்று ஓய்வூதிய பலன்களை பெறும் நிலையில், மீதமுள்ள 75% பேர் ஓய்வூதிய பலன்கள் இன்றி வெளியேற்றப்படுவர். சேவா நிதியாக ரூ.11-12 லட்சம் வழங்கப்படும் எனும் போதிலும் போராட்ட அக்னியை அணைக்க அது போதவில்லை.

7. 12 ஆம் வகுப்பு முடித்து பணியில் சேர்பவர்கள் 4 ஆண்டு நிறைவுக்கு பின், அவர்களது வயதில் பட்டம் பெற்று இருக்கும் மற்ற இளைஞர்களோடு போட்டியிட வேண்டிய சூழல் உருவாகும் என்றும், அவர்கள் பட்டம் பெற்று வேலைக்கு செல்ல எண்ணினால் 26 வயதில்தான் அது சாத்தியப்படும் என்ற சூழல் நிலவுகிறது.

8. தற்போதுள்ள ராணுவ ஆட்சேர்ப்பு நடைமுறை காலப்போக்கில் அழிக்கப்பட்டு அக்னிபாத் போன்ற 4 ஆண்டு கால குறுகிய கால பணிமுறை தொடர வாய்ப்பிருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

9. அமெரிக்கா போன்ற நாடுகளில் அடிக்கடி நாம் பார்க்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும்பாலும் குறுகிய காலம் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினரால் நிகழ்த்தப்படுகின்றன. அதுபோன்ற ஒரு பாதுகாப்பற்ற சூழல் நமது நாட்டில் உருவாக வாய்ப்பு உருவாகி விடும் எனவும் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

10. ராணுவ வீரர்களின் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்பதை மத்திய அரசே தெரிவித்துள்ளது. செலவை குறைக்க ஓய்வூதிய திட்டத்தில் நிதி மேலாண்மை எவ்வாறு செய்வது என நிதி ஆலோசனை பெறுவதை விட்டுவிட்டு, ராணுவ ஆட்சேர்ப்பில் கைவைப்பதில் ஆபத்தில் முடிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com