வருடாந்திர பிரமோற்சவம்: கருட சேவை நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையில் மலையப்ப சாமி கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா கடந்த 7-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மலையப்ப சாமி ஒவ்வொரு வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலிப்பார். பிரமோற்சவத்தை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, திருமலை முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும்.
ஆனால், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பக்தர்களின்றி ஏகாந்தமாக கோயிலின் உள்ளேயே கல்யாண உற்சவ மண்டபத்தில் மலையப்ப சாமி அருள்பாலித்தார். இந்த ஆண்டும் கொரோனாவால், கோயிலின் உள்ளேயே பிரமோற்சவ விழா ஏகாந்தமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவது கருட சேவை. ஏழுமலையானின் வாகனமான கருடன் மீது அமர்ந்து அவர் காட்சி தரும் விதமாக, கோயிலின் உள்ளேயே சேவை நடைபெற்று வருகிறது.
இந்த கருட சேவையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் அர்ச்சகர்கள் மரியாதை செய்தனர். முன்னதாக ஆந்திர அரசு சார்பில் மூலவரான ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டது.