உத்தரகாண்ட் மாநிலத்தில் சொகுசு விடுதி ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிந்த அங்கிதா பண்டாரியை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் உடற்கூறு அறிக்கை வெளியிடப்பட்டு சரியான விசாரணை நடைபெறும்வரை, அங்கிதா பண்டாரியின் உடல் அடக்கம் செய்யப்படாது எனவும், அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஸ்ரீநகர் நகரத்தில் போராட்டம் நடத்தி வலியுறுத்தினர். அங்கிதா பண்டாரியின் படுகொலையை மூடி மறைக்க முயற்சி நடைபெறுவதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளன. அங்கிதா பண்டாரி பணிபுரிந்து வந்த சொகுசு விடுதி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சர் வினோத் ஆர்யாவின் மகனுக்கு சொந்தமானது.
முன்னாள் அமைச்சரின் மகனான புல்கித் ஆர்யா மற்றும் அவரது சொகுசு விடுதியின் இரண்டு ஊழியர்களை உத்தரகாண்ட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, பாஜக தலைவரின் மகனை காப்பாற்ற முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி இதே குற்றச்சாட்டை வலியுறுத்தி வருகிறது.
தவறு செய்தது யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சி முன்னாள் அமைச்சர் வினோத் ஆர்யாவை இடைநீக்கம் செய்துள்ளது.
அங்கிதா பண்டாரி காணாமல் போனதாக சொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் ரிஷிகேஷ் அருகே உள்ள சில்லா கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. அந்த இளம் பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ளது யார் என தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து சொகுசு விடுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளுமாறும், சட்ட விரோதமாக செயல்படும் விடுதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே 19 வயதான அங்கிதா பண்டாரியின் மரண செய்தி காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து, பொதுமக்கள் ஆர்யாவின் சொகுசு விடுதிக்கு தீ வைக்கும் ஒரு பகுதியை இடித்தும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
டிஐஜி ரேணுகா தேவி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமீ உத்தரவிட்ட போதிலும், பொதுமக்கள் கோபம் தீராத நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சாலை மறியல் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி, வினோத் ஆர்யா மகனை காப்பாற்ற முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த கொலை அரசியல் ரீதியாகவும் பெரிய விவகாரமாக வெடித்துள்ளது.
அங்கிதா பண்டாரியின் நண்பர் ஒருவர் அளித்துள்ள தகவல்படி, அங்கிதா பண்டாரியை பாலியல் தொழிலில் தள்ள முயற்சி நடந்ததாகவும், சம்பவம் நடைபெறும் முன் அவர் புல்கித் ஆர்யாவின் அறையில் தங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அங்கிதா மாயமாகிவிட்டார் என புல்கித் ஆர்யா தெரிவித்திருந்த நிலையில், அவர் சொகுசு விடுதியில் இரவு உணவு உண்டார் எனவும் தெரியவந்துள்ளது. ஆகவே உத்தரகாண்ட் போலீசார் தொலைபேசி செய்திகள், சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வைக்க முயற்சி நடைபெறுவதாக அங்கிதாவே குற்றம்சாட்டி அதற்காக பத்தாயிரம் ரூபாய் அளிக்கப்படும் என கட்டாயப்படுத்தப்பட்டதாக அளித்த தகவல்களும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புது டெல்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்