அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புகழ்பெற்ற தேசிய பூங்காவில் வாழும் வனவிலங்குகள் வேறு வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
அசாம் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாதலம் தான் காஸிரங்கா தேசிய பூங்கா. இங்கு தான் உலகிலேயே அதிகமான அளவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன. அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் காஸிரங்கா தேசிய பூங்கா மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கனமழை காரணமாக காஸிரங்கா தேசிய பூங்காவில் அதிகமான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதால் வனவிலங்குகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளது. பூங்காவின் 50% க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளதால் மூழ்கியுள்ளதால், யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கர்பி மலைப்பகுதிக்கு குடிபெயர்ந்து வருகிறது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளத்தின் அளவு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நிறைய அரிய மான் வகைகள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆகவே எஞ்சியுள்ள விலங்கினங்களை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.