கால்நடைத் தீவன முறைகேடு தொடர்பான 4வது வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து, 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
பீகார் முதலமைச்சராக இருந்த போது 1990களில் தும்கா கருவூலத்தில் 3 கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடி செய்ததற்காக லாலு பிரசாத்திற்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. லாலு உட்பட 18 பேர் குற்றவாளிகள் என ராஞ்சி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 12 பேர் குற்றமற்றவர்கள் என ராஞ்சி நீதிமன்றம் விடுவித்தது. ஏற்கனவே கால்நடைத் தீவன முறைகேடு தொடர்பான 3 வழக்குகளிலும் லாலு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவிற்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் மீது மேலும் ஒரு கால்நடைத் தீவன முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.