18வது மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. பிரதமராக மோடி, நேற்று (ஜூன் 9) பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், இந்தியாவின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அந்த வகையில், எம்.பி.க்கள் பதவியேற்பின்போது குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் பின்னால் உள்புறம் விலங்கு ஒன்று நடமாடுவது புகைப்படக் கலைஞர்களின் கேமராக்களில் சிக்கியது.
இதையடுத்து, அங்கு சென்றது சிறுத்தையா அல்லது பூனையா எனச் சர்ச்சை கிளம்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும், ’பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தபோது இந்த மர்ம விலங்கு எப்படி வந்தது’ எனக் கேள்வி எழுப்பியிருப்பதுடன், ‘இது நாடாளுமன்றமா அல்லது வனவிலங்கு சரணாலயமா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.