கேரளாவைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், வி.முரளீதரன், கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஏப்ரல் 6) பாஜகவில் இணைந்தார். பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்டிருந்த ஆவணப்படத்துக்கு ஆதரவாக, கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி, அனில் அந்தோணி கருத்து தெரிவித்திருந்தார். இது, கேரளத்தில் மட்டுமின்றி, இந்திய காங்கிரஸிலும் அதிர்வலைகளை எழுப்பியது. இதைத் தொடர்ந்து காங்கிரஸிலிருந்தும் விலகுவதாக, மறுநாளே (ஜனவரி 25) அறிவித்தார்.
இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று டெல்லியில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்தது குறித்து அனில் அந்தோணி, “பாஜக இன்றுடன் 44வது வருடத்தைக் கொண்டாடி மகிழ்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் நான் பாஜகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இதன்மூலம், தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையை பிரதமர் மோடி கொண்டுள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு குடும்பத்திற்காக உழைப்பதுதான் அவர்களுடைய கடமை என்று நம்புகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை நாட்டிற்காக உழைப்பதுதான் என்னுடைய கடமை என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அனில் அந்தோணி பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ”தன் மகன் பாஜகவில் இணைந்தது தவறான முடிவு” என அனில் அந்தோணியின் மகனும் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “பாஜகவில் சேர்ந்திருக்கும் அனிலின் இந்த முடிவு என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. இது முற்றிலும் தவறான நடவடிக்கை. அவரைப்போல, நான் வேறு எந்தக் கட்சிக்கும் மாற மாட்டேன். எனக்கு 82 வயதாகிறது. நான், என் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறேன். என்றாலும், என் கடைசி மூச்சு இருக்கும்வரை காங்கிரஸுடன் மட்டும்தான் இருப்பேன்” என்றவர், பாஜக குறித்தும் தாக்கியிருந்தார்.
அவர், “ஒற்றுமையும் மதநல்லிணக்கமும்தான் இந்தியாவின் அடிப்படை. 2014ஆம் ஆண்டு முதல் நாட்டைச் சீர்குலைக்கும் முயற்சிகளை பாஜக செய்து வருகிறது. 2014ஆம் ஆண்டு அத்தகைய நடவடிக்கைகள் மெதுவாக நடைபெற்றது. ஆனால், 2019ஆம் ஆண்டிலிருந்து அது வேகம் பிடித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.