ஆந்திராவில் சாலையில் குப்பை கொட்டிய பெண்ணின் வீட்டு வாசலில் நகராட்சி அதிகாரிகள் பதிலுக்கு குப்பையைக் கொட்டி, எச்சரிக்கை விடுத்தனர்.
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் துப்புரவு தொழிலாளர்கள் தினமும் ஏரியா வாரியாக தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதை அவ்வப்போது மேலதிகாரிகளும் பார்வையிட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் குப்பைகளை அப்புறப்படுத்த குப்பைத் தொட்டிகள் புதிதாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியில் சில பகுதிகளை நகராட்சி ஆணையர் பார்வையிட்டார். அப்போது ஒரு பெண் தன் வீட்டுக் குப்பைகளை தெருவில் இருக்கும் குப்பை தொட்டியில் போடாமல் தெருவில் வீசுவதை கண்டார். இதனால் கோபமடைந்த நகராட்சி ஆணையர் ஸ்வப்னில் தினகர் புன்ட்கர், அங்கிருந்த துப்புரவு தொழிலாளியிடம் ஒரு அட்டைப்பெட்டியில் குப்பையை நிரப்பி கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். அந்த தொழிலாளரும் குப்பையை அட்டைப்பெட்டியில் நிரப்பிக் கொண்டு வந்து நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பெண்ணின் வீட்டு வளாகத்தின் முன்பு கொட்டினார்.
மேலும் அடுத்த முறை இவ்வாறு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என கமிஷனர் அந்தப் பெண்ணை எச்சரிக்கையும் செய்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.