தனது ஆன்லைன் காதலியை பார்க்க சுவட்சர்லாந்து செல்ல நினைத்த ஆந்திர இளைஞர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த கணினி மென்பொருள் பொறியாளர் பிரஷாந்த் வையின்டம். இவரையும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தாரி லால் என்பவரையும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் கடந்த 14ஆம் தேதி கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஆவணம் இன்றி பாகிஸ்தானிற்குள் நுழைந்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் வழியாக ஆவணம் இன்றி பாகிஸ்தானின் சோலிஸ்தான் பாலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
(பிரஷாந்த் வையின்டம்)
இவர்கள் இருவரும் எவ்வாறு பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்தார்கள் என்பது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அதிர்ச்சியான, சுவாரஸ்யமான தகவல்கள் வெளியானது. இணையதளத்தில் ஒரு பெண்ணுடன் காதல் வசப்பட்டுள்ளார் பிரஷாந்த். தனது இணையதள காதலியின் மேல் இருந்த தீராத அன்பால் அவரை முதல் முறையாக சந்திக்க ஆந்திராவில் இருந்து மத்திய பிரதேசம் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரது காதலி சுவட்சர்லாந்து சென்றுவிட்டதாக தகவல் கிடைக்க அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காதலுக்கு தூரமெல்லாம் ஒரு பொருட்டாக இருக்குமா?. காதலுக்காக எதனையும் செய்ய துடிக்கும் இளைஞனுக்கு சுவிட்சர்லாந்து ஒரு தூரமாக இருக்க வாய்ப்பேயில்லை. ஆனால், பிரஷாந்த் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்துள்ளார். நில வழியாகவே சுவட்சர்லாந்து செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். என்ன இந்தியாவில் இருந்து நிலவழியாக சுவிட்சர்லாந்தா?. கேட்பதற்கே எப்படி இருக்கிறது. காதலுக்குதான் கண், காது, மூக்கு என எதுவும் இல்லையே. நம்ம நாயகன் பிரஷாந்த் காதலியை தேடி பயணப்பட்டார். ஆனால், இந்த காதல் பயணத்திற்கு அண்டை நாடான பாகிஸ்தானிலேயே முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.
மத்திய பிரதேசத்தில் இருந்து முதலில் ராஜஸ்தான் மாநிலத்திற்கும், பின்னர் அங்கிருந்து எல்லை வழியாக பாகிஸ்தானுக்கும் அவர் சென்றதாக தெரிகிறது. எனினும் இவர் எவ்வாறு பாகிஸ்தான் சென்றனர் என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் தெரியவில்லை. அதேபோல பிரஷாந்தும் தாரி லாலும் எவ்வாறு சந்தித்து ஒன்றாக பாகிஸ்தானிற்குள் நுழைந்தனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். விசாரணைக்கு பிறகு இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.