ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வாடிக்கையாக இருந்துவருகிறது. வழக்கம்போல் நேற்று கோயில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணத் தொடங்கினர். அப்போது உண்டியலில் பக்தர் ஒருவர் ஒரு காசோலையை காணிக்கையாக போட்டிருந்தார். அந்தக் காசோலையில், ‘100 கோடி ரூபாய்’ என எழுதப்பட்டு இருந்தது.
அதிலும், ’வராஹ லக்ஷ்மி நரசிம்ம தேவஸ்தானம்’ என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் 10 ரூபாய் என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி என்றும் எழுதப்பட்டிருப்பது தெரிந்ததும், அனைவருக்கும் ஆர்வமும், சந்தேகமும் ஏற்பட்டது. இதுகுறித்து உயரதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். அந்த செக்கில் எழுதப்பட்டிருந்த விவரங்களின் அடிப்படையில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்புக் கணக்கு காசோலை என்பது என தெரியவந்தது. மேலும் அவரது கணக்கில் ரூ.17 மட்டும் இருப்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முழுமையான விவரங்களை எடுக்க கோயில் தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.