ஆந்திராவில் கோணசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 26 மாவட்டங்களாக அம்மாநில அரசு பிரித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் நகரை மையமாக கொண்டு கோணசீமா என்ற மாவட்டம் பிரிக்கப்பட்டது. அப்போது அதற்கு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர். அந்த பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணியாக சென்றபோது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இதன் விளைவாக இருதரப்பினருக்கும் கலவரம் ஏற்பட்டது.
இதில் அமைச்சர் விஸ்வரூப் மற்றும் மும்முடிவரம் எம்எல்ஏ சதீஷ் ஆகியோரின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 8 பேருந்துகளுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.இதில் காவல்துறை வாகனங்களும், எஸ்பி சுப்பா ரெட்டியின் வாகனம் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு பதட்டம நீடித்து வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.