ஆந்திர மாநிலத்திலுள்ள தெலுங்கு மற்றும் உருது வழி அரசு பள்ளிகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு மற்றும் உருது வழியாக கல்வி கற்பிக்கும் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசுப் பள்ளிகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இதற்கான ஆணையை அம்மாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. மேலும் அந்தப் பள்ளிகளில் தெலுங்கு அல்லது உருது கட்டாய மொழியாக கற்பிக்கப்படும் என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டி அரசின் இந்த அதிரடி முடிவிற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர்.
அவர்களில் சிலர், “தாய்மொழி வழியில் ஆரம்பக் கல்வி கற்றால் குழந்தைகள் எளிதாக பாடங்களை படிக்க முடியும். அத்துடன் பல தேசிய மற்றும் சர்வதேச கல்விக் குழுக்கள் ஆரம்பக் கல்வியை மாணவர்கள் தங்களின் தாய்மொழி வழியில் படிப்பதே சிறப்பாக இருக்கும் என்று பரிந்துரைத்துள்ளன. ஆந்திர அரசு இந்த பரிந்துரை எதனையும் ஏற்காமல் இந்த புதிய முடிவை எடுத்துள்ளது” எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கு ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ், “நாங்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து தெலுங்கு மற்றும் உருதுவை நீக்கவில்லை. இந்த இரண்டு மொழியும் கட்டாயமாக அரசுப் பள்ளியில் கற்பிக்கப்படும். எனினும் பெருவாரியான மக்கள் ஆங்கில வழியில் கல்வி வேண்டும் என்பதற்காக தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். ஆகவே தான் நாங்கள் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.