ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு ஜெகன் மோகனின் அரசு காலத்தில் கலக்கப்பட்டிருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். தவிர, அதற்கான ஆதாரங்களும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மறுத்திருந்தார்.
மேலும் அவர், “திருப்பதி லட்டுக்களில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டியதன் மூலம் சந்திரபாபு நாயுடு பாவம் செய்துவிட்டார். திருப்பதி கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் போலியான செய்தி பரப்புகிறார். இதன்மூலம் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்திற்கு பரிகாரமாக 28-ஆம் தேதி (நாளை) மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பரிகார பூஜைகள் செய்யவேண்டும். அத்துடன், 28-ஆம் தேதி திருப்பதி கோயிலுக்குச் சென்று சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க பரிகார பூஜை நடத்தப்போகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இது, ஆந்திராவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாஜக, ஜனசேனா, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் ஜெகன் மோகன் ரெட்டி மீது மதரீதியாக விமர்சித்திருந்தன. குறிப்பாக, திருப்பதி கோயிலில் மாற்று மதத்தினர் செல்லும்போது இறை நம்பிக்கை தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதை ஜெகன் மோகன் ரெட்டி செய்வாரா? எனக் கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும், ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி வருவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி பயணத்தை கடைசிநேரத்தில் ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து அவர், “சந்திரபாபு நாயுடு தனது 100 நாள் ஆட்சியின் தோல்விகளைத் திசை திருப்பவும், மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் லட்டு விவகாரத்தை கொண்டுவந்தார். லட்டு விவகாரத்தில் தனது தோல்வியை மறைக்க, இறை நம்பிக்கை விவகாரத்தைக் கொண்டுவந்தார். வேண்டுமென்றே லட்டுவின் தரத்தில் சந்தேக விதைகளை விதைத்துள்ளார். என்னுடைய மதம் என்ன என்று கேட்கிறார்கள். என்னுடைய மதம் மனிதாபிமானம், அதைப் படிவத்தில் எழுதிக் கொள்ளுங்கள். நான் முதல்வராக இருந்தபோது 5 முறை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்திருக்கிறேன். தரம் குறைவு என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிராகரிக்கப்பட்ட நெய்யானது, லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.