ஆந்திர மாநிலம், விஜயநகரன் மாவட்டத்தில் புகை மூட்டம் காரணமாக அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயநகரம் நோக்கி வந்த அரசு பேருந்தும் பாலகொள்ளுவிலிருந்து விஜய நகரம் நோக்கி வந்த அரசு பேருந்தும், விஜயநகரம் மண்டலம் சுங்கரி பேட்டா அருகே வந்தபோது, சாலையோரம் வைக்கப்பட்ட தீயின் காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால் பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலை தெளிவாக தெரியவில்லை.
இதனால் எதிர் திசையில் வந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்து ஓட்டுநர் முயற்சி செய்தபோது 2 அரசு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 2 அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை விஜயநகரம் எஸ்.பி. ராஜகுமாரி தலைமையிலான போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.