வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெகன் மோகன் மீது பத்துக்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஜெகன்மோகன் விடுத்த கோரிக்கையை நிராகரித்த சிபிஐ நீதிமன்றம், இன்றைய தினம் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று ஐதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஆஜராகினார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ஆஜராகியிருப்பது இதுவே முதன்முறையாகும். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர், 2012 மே மாதம் முதல் 2013 செப்டம்பர் வரையில் சிறையில் இருந்தது நினைவுகூரத்தக்கது.