”அதிக குழந்தைகளைப் பெறுபவரே தேர்தலில் போட்டி” - சட்டத்தைக் கொண்டுவரும் முடிவில் ஆந்திர முதல்வர்!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டு வரப் போவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுஎக்ஸ் தளம்
Published on

ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்துப் பேசிய அவர், “ஜப்பான், சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையில் அதிகளவிலான வயதானவர்கள் உள்ளதால் விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றனர். தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரத்தில் மக்கள்தொகையில் வயதானவர்கள் அதிகரிக்கும் அறிகுறிகள் பிரச்னை எழுந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 2047வரை மக்கள்தொகையில் சமநிலையை தக்கவைத்துக் கொண்டாலும், தென் மாநிலங்களின் மக்கள்தொகை விளைவுகளைச் சந்திக்க தொடங்கிவிட்டன” என்றார்.

இதையும் படிக்க: வேகம் காட்டும் இஸ்ரேல்| அழிக்கப்படும் தலைவர்கள்.. அடுத்த தலைவர் யார்? பட்டியல் ரெடி செய்த ஹமாஸ்!

சந்திரபாபு நாயுடு
‘இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்’ - சாமியார் பேச்சால் சலசலப்பு

தொடர்ந்து அவர், “கிராமங்களில் இருந்து இளைஞர்கள் வெளியேறி, வேலைவாய்ப்பை தேடி நகரங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். இதனால் கிராமங்களில் முதியவர்கள் மட்டுமே வசிக்கின்றனர். தேசிய கருவுறுதல் சராசரியான 2.1-ஆக இருக்கும் நிலையில், தென் மாநிலங்களில் மிகவும் குறைவாக 1.6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இது தொடர்ந்தால், 2047-க்குள் ஆந்திர மாநிலம் கடுமையான முதுமைப் பிரச்னையை சந்திக்க நேரிடும். இதனை தவிர்க்க, நாம் இப்போதிருந்தே செயல்பட வேண்டும்.

ஆந்திரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறோம்.
சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுமுகநூல்

இதனால், ஆந்திரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறோம். இந்த நடவடிக்கையானது, மக்கள் அதிக குழந்தைகளைப் பெற ஊக்குவிப்பதாகும். அதிக குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலனை செய்கிறோம். வரும் காலங்களில் துடிப்பான அதிகளவிலான இளைஞர்கள் இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டதாகும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மும்பையில் தைவான் தூதரகம்.. இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா!

சந்திரபாபு நாயுடு
`அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ஊதிய உயர்வு'- சிக்கிம் அரசின் அதிரடி முடிவு ஏன்?

அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் எக்ஸ் தளத்தின் தலைமை செயல் நிறுவனருமான எலான் மஸ்க் எப்போதும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுபவர். இவர், அடிக்கடி ஜப்பான் மற்றும் சீனாவைப்போல் உலகளவில் மக்கள்தொகை பெருமளவு சரியும் என கடந்த ஆண்டே எச்சரித்திருந்தார். தொடர்ந்து நடப்பாண்டு ஜூன் மாதத்திலும் இதுகுறித்து அவர் வலியுறுத்தி இருந்தார். "மக்கள்தொகை வீழ்ச்சி, நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளையும் என்பதால் மக்கள் குழந்தைகளைப் பெறுவதில்லை என்ற கதை முட்டாள்தனமானது. பூமி அதன் தற்போதைய மனித மக்கள்தொகையைவிட பல மடங்கு தாங்கும் சக்தி உடையது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் அமைப்பும் நன்றாகத்தான் இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

"மக்கள்தொகை வீழ்ச்சி, நாகரிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளையும் என்பதால் மக்கள் குழந்தைகளைப் பெறுவதில்லை என்ற கதை முட்டாள்தனமானது.
எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர்
எலான் மஸ்க்
எலான் மஸ்க்எக்ஸ் தளம்

தென்கொரியாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தற்போது 0.72 ஆகக் குறைந்துள்ளது. இது 2022இல் 0.78 ஆக இருந்தது. அதுபோல் சீனாவிலும் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2022ஆம் ஆண்டில் இந்த விகிதம் 1.28 ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையில் 20 லட்சத்துக்கும் அதிகமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவைப்போலவே ஜப்பானும் குறைந்த பிறப்பு விகித பிரச்னையை எதிர்கொள்கிறது. ஓராண்டுக்கு முன்பு இந்த விகிதம் 1.26 ஆக இருந்தது. அதேநேரம் 2023ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் எட்டு லட்சம் குறைந்துள்ளது.

அதுபோல், ரஷ்யாவிலும் பிறப்பு விகிதம் கடந்த 1990-ல் இருந்து குறைந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு குழந்தை பிறப்பை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு பெற்றோரும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அதிபர் புடின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வலியுறுத்தியிருந்தார். இந்த நாடுகளைத் தவிர பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இந்தியாவிலும்கூட மகாராஷ்டிரா மற்றும் கோவா போன்ற மாநிலங்களிலும் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. பிறப்பு விகிதம் என்பது 1,000 பேருக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்ற எண்ணிக்கையாகும். உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவின் பிறப்பு விகிதம் 16.1 ஆகும். 2022ல் இந்தியாவின் கருவுறுதல் விகிதம் 2.0 ஆக இருந்தது. Lancet இன் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த விகிதம் தற்போது 1.9 ஆக குறைந்துள்ளது.

இதையும் படிக்க: பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு குறியா? பிரதமர் இல்லத்தின் மீது பறந்த ட்ரோன்.. ஹிஸ்புல்லா தாக்குதல்!

சந்திரபாபு நாயுடு
2050-ல் இந்தியர்களின் பிறப்பு விகிதம் சரிய வாய்ப்பா? எச்சரிக்கும் நிபுணர்கள்! காரணம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com