மகன் திருமண செலவு ரூ.18,000 மட்டுமே..! - அசத்தும் ஐஏஎஸ் அதிகாரி

மகன் திருமண செலவு ரூ.18,000 மட்டுமே..! - அசத்தும் ஐஏஎஸ் அதிகாரி
மகன் திருமண செலவு ரூ.18,000 மட்டுமே..! - அசத்தும் ஐஏஎஸ் அதிகாரி
Published on

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது மகன் திருமணத்திற்கு ரூ.18,000 மட்டுமே செலவு செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.

திருமணம் என்றாலே தற்போதைய காலத்தில் ஒரு ஆடம்பரமான நிகழ்ச்சி ஆகிவிட்டது. வசதி வாய்ப்பு குறைந்தவர்களும், தங்களது மகன்/மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்துகின்றனர். அப்படி திருமணம் நடத்துவதை தங்கள் கெளரவமாகவும் நினைக்கின்றனர். உறவினர்கள், ஊர்மக்கள், தெரிந்தவர்கள் எனப் பலருக்காகவும் விருப்பமில்லாவிட்டாலும், செலவு செய்து திருமணம் செய்ய வேண்டும் என்ற கலாச்சாரம் பெருகிவிட்டது. அத்துடன் எளிமையாக திருமணம் செய்பவர்களை விமர்சனம் செய்யும் எண்ணங்களும் பெருகிவிட்டன. 

இந்த மாயத் தோற்றத்திற்கு பாடம் புகட்டும் வகையில், அவ்வப்போது சிலர் தங்கள் குடும்ப திருமணங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி தனது மகன் திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார். ஆந்திராவின் விசாகப்பட்டினம் நகர்ப்புற வளர்ச்சித்துறையைச் சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி பட்நாலா பசந்த் குமார். இவர் தனது மகனின் திருமணத்தை வரும் பிப்ரவரி 10ஆம் தேதி நிச்சயித்துள்ளார். இந்தத் திருமணத்திற்காக மொத்தம் ரூ.18,000 மட்டுமே செலவு செய்துள்ளார். இந்தத் தொகையில் விருந்தினர்களின் உணவு ஏற்பாடும் அடங்கும். எளிமையுடன் நடைபெறவுள்ள இந்தத் திருமணத்தையொட்டி, புதுமணத் தம்பிகளை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் ஆளுநர் நரசிம்மன் வாழ்த்தவுள்ளார். 

ஏற்கனவே தனது மகள் திருமணத்தை பசந்த் குமார் எளிமையாக கடந்த 2017ஆம் ஆண்டு நடத்தியிருந்தார். அப்போது பசந்த், ஆளுநர் நரசிம்மனின் சிறப்பு இணைச் செயலாளராக இருந்தார். அப்போது எளிமையாக நடந்த தனது மகள் திருமணத்திற்கு அவர், வெறும் ரூ.16,100 மட்டுமே செலவு செய்திருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com