ஆந்திரா குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 10 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்திருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமிலப்பள்ளி கிராமம் அருகே தனியாருக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் குவாரி உள்ளது. சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணியில் பயன்படுத்துவதற்காக வெளியூர்களிலிருந்து ஜெலட்டின் குச்சிகளை வரவழைப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் ஜெலட்டின் குச்சிகள் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டன.
அப்போது எதிர்பாராத விதமாக ஜெலட்டின் குச்சி ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஏராளமான ஜெலட்டின் குச்சிகள் தொடர்ந்து வெடித்து அந்த பகுதி போர்க்களம் போல் மாறியது. ஜெலட்டின் குச்சிகளை இறக்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், தீயணைப்பு துறை மற்றும் கிராம மக்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்த தகவலறிந்த கடப்பா மாவட்ட எஸ்பி அன்புராஜன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சொந்த ஊரான புலிவெந்துலா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.