ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாக உள்ளநிலையில், திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஸ்ரீபாலாஜி மாவட்டம் என்ற புதிய மாவட்டம் உருவாக உள்ளதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம், கடந்த 1956-ல் உருவானது. பின்னர் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி தனி தெலங்கானா மாநிலம் உருவானது. தலைநகர் ஹைதராபாத்துடன் தெலங்கானா பிரிக்கப்பட்டதால், ஆந்திராவுக்கு புதிய தலைநகரமாக அமராவதி நகரம் அறிவிக்கப்பட்டது.
ஆந்திராவில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன. இந்த 13 மாவட்டங்களும் அதிக பரப்பளவு கொண்டவையாகவும், மாவட் தலைநகரங்கள் வெகு தொலைவில் இருப்பதாலும், தினசரி அரசு சார்ந்த பணிகளுக்காக மாவட்ட பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு கெல்ல பொதுமக்கள் வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்டங்களை 2-ஆக பிரிக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் 13 மாவட்டங்களை பிரிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருந்தனர். தற்போது பணிகள் முடிவடைந்ததால், மாவட்டங்கள் பிரிப்பதற்கான வரைபடங்களை நேற்றுமுன்தினம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் அதிகாரிகள் வழங்கினர். அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு புதிய மாவட்டங்கள் மற்றும் அவற்றின் எல்லைகள் தொடர்பான அறிவிப்பை ஆந்திர அரசு வெளியிட்டது. அதன்படி, புதிதாக 13 மாவட்டங்கள் உயதமாகிறது. மொத்தம் 26 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.
சித்தூர் மாவட்டம் சித்தூர், திருப்பதி என இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூர் மாவட்டத்திற்கு சித்தூர் தலைநகரமாகவும், திருப்பதியை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீபாலாஜி மாவட்டம் புதிதாக உதயமாகிறது. இந்த மாவட்டத்தில் திருப்பதி, சந்திரகிரி, ஸ்ரீகாளஹஸ்தி, வெங்கடகிரி, சூளுர் பேட்டை, நாயுடு பேட்டை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற உள்ளன.
ஆந்திராவில், ஸ்ரீகாகுளம், மன்யம், விஜயநகரம், அல்லூரி சீதாராம ராஜு, விசாகப்பட்டினம், அனகாபள்ளி, காக்கிநாடா, கோனசீமா, ராஜ மகேந்திர வரம், பீமவரம், ஏலூரு, கிருஷ்ணா, விஜயவாடா, குண்டூர், பல்நாடு, பாபட்லா, பிரகாசம், நெல்லூர், கர்னூல், நந்தியாலா, அனந்தபுரம், புட்டபர்த்தி, கடப்பா, ராயசோட்டி, சித்தூர், திருப்பதி (ஸ்ரீபாலாஜி) என மொத்தம் 26 மாவட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இதன் அடிப்படையில் இறுதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை முதல் புதிய மாவட்டங்கள் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.