சமூக வலைத்தளத்தின் மூலம் பழகிய 300-க்கும் மேற்பட்ட பெண்களிடம், அவர்களின் புகைப்படங்களை வாங்கியதோடு பணம், நகைகளை பறித்து பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியதாக இளைஞரை கடப்பா போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பா தாலுகா போலீசார், ஒரு வீட்டில் நடைபெற்ற திருட்டு வழக்கில் கைது செய்த இளைஞரிடம் இருந்து ரூ.1.26 லட்சம் பணம் மற்றும் 30 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மீது ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு தெலுங்கு மாநிலங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து கடப்பா டி.எஸ்.பி. சுனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்...
“ கடப்பா மாவட்டம் புரோதட்டுரைச் சேர்ந்த சென்னுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார் என்கிற ராஜாரெட்டி, பொறியியல் முதலாம் ஆண்டிலேயே கல்லூரிக்கு செல்வதை தவிர்த்து உல்லாசமாக சுற்றுவதை பழகி கொண்டார். மேலும் 2017 ல் திருட்டு வழக்கில் சிறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி அன்று திருட்டு வழக்கில் பிரசன்னகுமாரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்தன. கடப்பா, விஜயவாடா, ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள இளம் பெண்கள் மற்றும் நடுத்தர வயது பெண்களுடன் ஃபேஸ்புக், ஷேர்சாட், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவளைதளத்தின் மூலம் தொடர்பை ஏற்படுத்திய பிரசன்னகுமார், அவர்களிடம் நைசாக பேசி காதல் வளையில் விழவைத்துள்ளார்.
பின்னர், அவர்களுடன் போனில் அரட்டை அடிப்பதும், அவர்களின் நிர்வாண, அரை நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் படி கூறி அதனை சேமித்து வைத்து அவர்களை பிளாக்மெயில் செய்து பணம் மற்றம் நகைகளை கேட்டுள்ளார். வழங்காவிட்டால் பெண்களின் படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்வதாக மிரட்டி வந்துள்ளார். அவ்வாறு 200 இளம் பெண்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நடுத்தர வயது பெண்களை ஏமாற்றி அவர்களில் சிலரை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ஆனால், இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் எந்தவித புகாரும் அளிக்காவிட்டாலும் அவரது போனில் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் படங்கள் உள்ளன. அதனை வைத்து மாவட்ட எஸ்.பி. அன்புராஜன் உத்தரவு பெற்று இந்த வழக்குகளின் மீது அவரை கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.