ஆந்திராவில் பல்வேறு இடங்களில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த 11 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்ட எஸ்பி அன்புச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, "கடப்பா மாவட்டத்தில் நள்ளிரவு முழுவதும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கடப்பா மாவட்டம், எல்லாபள்ளி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் சர்வதேச அளவிலான செம்மரக் கடத்தல்காரர்கள் பக்ருதீன் மற்றும் உதவியாளர் லத்தீப் என தெரியவந்தது.
பக்ருதீன் மீது ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 61 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டபோது கடப்பா மாவட்டத்தில் மேலும் இரண்டு இடத்தில் தமிழகத்தை சேர்ந்த கூலி ஆட்களை வைத்து செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. கடப்பா மாவட்டம் சென்னூர் மற்றும் சித்தவட்டம் வனப்பகுதியில் கடத்தலில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேரையும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 பேரையும் கைது செய்தனர்.” என்றார்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்தப்பட்ட சுமார் 500 கிலோ எடையுள்ள 20 செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.