ஆந்திரப் பிரதேச தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி இன்று மாரடைப்பால் காலமானார்.
50 வயதான ஆந்திரப் பிரதேச ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டிக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். அதன்பின்னர் உடனடியாக அவரை ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவரை மருத்துவமனைக்கு கொண்டுவந்தவுடன் உடனடியாக CPR மற்றும் மேம்பட்ட இதய உயிர் ஆதரவு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவசர மருத்துவக் குழு, இருதயநோய் நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு 90 நிமிடங்களுக்கு மேல் CPR செய்யப்பட்டது. எங்களால் முடிந்த முயற்சிகள் செய்தும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. அதன்பின்னர் இன்று காலை 9:16 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
ஆத்மகூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த மேகபதி கவுதம் ரெட்டி, துபாய் எக்ஸ்போவில் கலந்து கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் துபாயில் இருந்து திரும்பினார். ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அமைச்சரின் அகால மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.