அமெரிக்காவில் நடந்த விபத்தில் ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினர் உயிரிழந்தார். அவர் உடலை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி) இருந்து வந்தவர் எம்.வி.வி.எஸ்.மூர்த்தி (80). விசாகப் பட்டனம் தொகுதியில் இருந்து 2 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 6ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அங்கு சென்றிருந்தார்.
அலஸ்கா மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சென்ற கார், லாரி ஒன்றுடன் பயங்கரமாக மோதியது. இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற பசவ புன்னையா, சவுத்ரி ஆகியோரும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
மூர்த்தியின் மறைவை கேட்டு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முதலைமைச்ச ருமான சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அவரது உடலை, இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்துவருகிறது.
மறைந்த எம்.வி.வி.எஸ் மூர்த்தி, தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரான என்.டி ராமராவுக்கு மிகவும் நெருக்கமானர். விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி என்ற கல்வி நிறுவனத்தை தோற்றுவித்த இவர், பல்வேறு கல்வி நிலையங்களை நடத்தி வந்தார்.