நெல்லூர் அருகே கிருஷ்ணப்பட்டினம் பகுதியில் வழங்கப்பட்ட ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
நெல்லூர் அருகே கிருஷ்ணப்பட்டினம் பகுதியில் ஆனதய்யா என்பவர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆயுர்வேத மருந்து தயாரித்து வழங்கிவந்தார். இந்த ஆயுர்வேத மருந்தைப்பெற சுற்றுப்புற மக்கள் அங்கு வந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. அங்கு கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாததால் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். எனவே இந்த மருந்து குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், ஆயுஷ் அமைச்சகம், ஐசிஎம்ஆர் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஆனந்தய்யா என்பவர் தயாரித்து வழங்கும் மருந்தில் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லையென்று நிரூபணமாகி இருப்பதால் அந்த மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் லேகியத்துக்கு மட்டுமே அனுமதி என்றும், கண்ணில் விடப்படும் சொட்டுமருந்துக்கு அனுமதி இல்லையென்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.