திருப்பதி மலைக்கோயிலுக்கு மலைக்காடுகள் வழியாக பிரார்த்தனைக்கு சென்ற வயதான பெண் பக்தரை ஆந்திர மாநில கான்ஸ்டபிள் சேக் அர்ஷத் 6 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
திருமலை திருப்பதிக்கு செல்லும் அன்னமய்யா பாதை கடப்பா வழியாக மாமண்டுரு கிராமத்திலிருந்து தொடங்குகிறது. மலைப்பகுதிகள் வழியாக செல்லும் 6 கி.மீ தூரம் கொண்ட இந்த பாதை வழியாக திருப்பதி செல்ல சில மணிநேரங்கள் ஆகும்.
ஆந்திர மாநிலம், நந்தலூர் மண்டலைச் சேர்ந்த மங்கி நாகேஸ்வரம்மா (58) அன்னமய்யாபாதை வழியாக நடைபயணமாக திருப்பதி மலைக்கு புறப்பட்டார். டிசம்பர் 22ஆம் தேதி மதியம் தனது பயணத்தின்போது உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டதால் அவரால் மேலும் நடக்க முடியவில்லை.
நோய்வாய்ப்பட்ட இவரை கவனித்த கடப்பா மாவட்ட சிறப்பு போலீஸ் குழு பக்தர்களுடன் சென்றது. அந்த வயதான பெண்மணியால் மேலும் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டதால், பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிள் ஷேக் அர்ஷத், மிகக்கடுமையான மற்றும் மலைப்பாங்கான காடுகள் நிறைந்த நடைபாதையில் 6 கி.மீ தூரத்திற்கு அவரை தோள்களில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஷேக் அர்ஷத் மீண்டும் நாகேஸ்வரராவ் என்ற மற்றொரு நபரை மருத்துவ சிகிச்சைக்காக தோளில் சுமந்து கொண்டு சாலையின் அருகே சென்று இறக்கிவிட்டார். போலீஸ் கான்ஸ்டபிளின் இந்த சேவையை அறிந்து காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் அவரை பாராட்டிவருகிறார்கள்.